யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறை, கழிவகற்றல் முகாமைத்துவம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக விரிவான கலந்துரையாடலானது உலக வங்கி குழுவினருடன் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம்(26) மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார அபிவிருத்தி உட்கட்டுமானம் மற்றும் சுற்றுலா துறைகளை விருத்தி செய்வது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் உலக வங்கி கடந்த இரண்டு மாதங்களாக பொருத்தமான திட்டங்கள் தொடர்பில் களத்தரிசிப்புக்கள் செய்து ஆராய்ந்து அடிப்படைத் தரவுகளை பெற்றிருந்தது.
இதன் இறுதி அங்கமாக துறைசார்ந்து காணப்படும் அபிவிருத்தி தேவைப்பாடுகள், தடைகள், அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள் மற்றும் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து திட்டங்களை நிச்சியப்படுத்தும் வகையில் கடந்த மூன்று தினங்களாக வடக்கு மாகாணத்தின் உள்ள மாவட்ட செயலாளர்களை சந்தித்து வருகின்றனர்.
அவ்வகையில் நேற்றையதினம் உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர் அபிட் கலி செயற்றிட்ட தலைவர் காயத்திரி சிங் மற்றும் உலக வங்கியின் ஏனைய பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆறு பேர், யாழ் மாவட்ட செயலாளரை சந்தித்து கலந்துரையாடியதுடன், அதனைத் தொடர்ந்து துறைசார் திணைக்களங்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலாளரால் மாவட்டத்தின் விவசாயம், மீன்பிடி அபிவிருத்திக்கான தேவைகள், அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை கைத்தொழில் வலயத்திற்கான புதிய முதலீடுகள், யாழ்ப்பாண கோட்டை மற்றும் யாழ்ப்பாண பழைய கச்சேரி போன்றவற்றை மரபுசார் சுற்றுலா நோக்கில் விருத்தி செய்தல், சரசாலை மற்றும் மண்டைதீவு சிறுதீவுப் பகுதிகளை சூழல்சார் சுற்றுலா மையங்களாக மாற்றுதல், நெடுந்தீவினை சுற்றுலா நோக்கில் முழுமையான அபிவிருத்தி கொண்ட தீவாக மாற்றுதல் போன்ற விடயங்களுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதேச ரீதியாக டிஜிற்றல் அடிப்படையிலான வானிலை அவதானிப்பு நிலையங்களை நிறுவுதல் போன்றவற்றுக்கான நிதி தேவைப்பாடு குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

மேலும், மீன்பிடி படகுத்தள அபிவிருத்தி ,போதைவஸ்து பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாகாண ரீதியான புனர்வாழ்வு நிலையம், உளநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாகாண ரீதியான காப்பகம், மற்றும் யாழ்ப்பாண நகர அபிவிருத்தி வெள்ள வடிகாலமைப்பு அபிவிருத்தி, கழிவு நீர் சுத்திகரிக்கும் செயற்றிட்டம், கழிவகற்றல் முகாமைத்துவம் போன்ற விடயங்களுக்கான அவசியப்பாடு குறித்து உலகவங்கி பிரதிநிதிகளிடம் மாவட்ட செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலின் இறுதியில் பின்வரும் செயற்றிட்டங்கள் முன்னுரிமையாகவுள்ளதாக உலக வங்கி குழுவினரிடம் முன்வைக்கப்பட்டது.
1.யாழ்ப்பாண நகர வெள்ள வடிகாலமைப்பு அபிவிருத்தி
2.கழிவு நீர் சுத்திகரிக்கும் செயற்றிட்டம்
3.மாவட்டத்திலுள்ள குளங்களை புனரமைக்கும் செயற்றிட்டம்
4.யாழ் நகர திண்மக்கழவு முகாமைத்துவம்
5.யாழ்ப்பாண கோட்டை மற்றும் யாழ்ப்பாண பழைய கச்சேரி போன்ற வற்றை மரபுசார் சுற்றுலா நோக்கில் விருத்தி செய்தல்
6.யாழ்ப்பாண மாவட்டத்தில் மீன்பிடி படகுத்களம் மற்றும் மீன்பிடி துறைமுக அபிவிருத்தி
7.அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கான புதிய முதலீடுகள்
8.உள்ளுராட்சி சபைகளின் திண்மக்கழவு முகாமைத்துவம்
இக் கலந்துரையாடலின் போது, உலக வங்கியின் செயற்பாட்டு முகாமையாளர் மற்றும் செயற்றிட்ட தலைவர் ஆகியோர் மாவட்ட செயலாளரால் முன்னுரிமைப்படுத்தி முன்வைக்கப்பட்ட செயற்றிட்டங்களை கருத்தில் கொள்வதாகவும், இச் செயற்றிட்டங்கள் தொடர்பிலான திட்டங்கள், செயற்றிட்ட முன்மொழிவுகள் மற்றும் சாத்தியப்பாட்டு அறிக்கைகள் போன்றவற்றை விரைவில் சமர்ப்பிக்குமாறும் கோரியிருந்தனர்.
இக் கலந்துயாடலின் இறுதியில் யாழ்ப்பாண பழைய கச்சேரி வளாகத்திற்கு உலக வங்கிக் குழுவினரை மாவட்ட செயலாளரால் அழைத்துச் செல்லப்பட்டு புனரமைப்பின் அவசியம் தொடர்பில் நேரடியாக விளக்கமளிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) க.ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், யாழ்ப்பாண மாநகர ஆணையாளர், மாநகரசபை பிரதம பொறியிலாளர், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதி மற்றும் உதவிப் பணிப்பாளர்கள், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள், கைத்தொழில் அதிகாரசபையின் மாகாணப் பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மற்றும் சுற்றுலா துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

