• May 29 2026

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் 5, 6 ஆவது மீளாய்வுகளுக்கு அங்கீகாரம்!

Ziya / May 29th 2026, 3:39 pm
image

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் 5 ஆவது மற்றும் 6 ஆவது மீளாய்வுகளுக்குச் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை நேற்று வியாழக்கிழமை தனது உத்தியோகபூர்வ அனுமதியை வழங்கியுள்ளது.


இதற்கமைய, இலங்கைக்கு சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதித்தொகை கிடைக்கப்பெறவுள்ளதுடன், இந்நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள ஒட்டுமொத்தக் கடன் தொகை 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.


இதேவேளை, இந்நீடிக்கப்பட்ட நிதி வசதியுடன் தொடர்புடைய சில முக்கிய அளவுகோல்களை இலங்கை பூர்த்தி செய்யத் தவறியுள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டுக் கொடுப்பனவு நிலுவைகள், இறக்குமதி வரம்புகளைக் கடுமையாக்குதல் அல்லது புதிய இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிக்காதிருத்தல் போன்ற தொடர்ச்சியான நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் இலங்கை பின்னடைவைச் சந்தித்துள்ளது.


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, எரிபொருள், மின்சாரம், உர மானியம் மற்றும் 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் அமைச்சரவை தீர்மானமொன்றை வெளியிடுவதற்கும், அவை ஒட்டுமொத்தமாக 100 பில்லியன் ரூபா எல்லைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் முன் நிபந்தனையாகக் கோரப்பட்டிருந்தது. எனினும், செப்டெம்பர் மாத இறுதிக்குள் இந்த அளவுகோல்களைச் நடைமுறைப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.


மேலும், சில்லறை எரிபொருள் விலைகளை அவற்றின் செலவு - மீட்பு மட்டங்களுக்குக் கொண்டு செல்வது மற்றும் மாதாந்த விலைச்சூத்திரத்துக்கு அமைவாகக் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைச் செய்வதிலும் முரண்பாடுகள் காணப்பட்டுள்ளன. இந்த நிபந்தனையானது 2025 டிசம்பர் மற்றும் 2026 ஏப்ரல் ஆகிய மாதங்களில் மீறப்பட்டுள்ளதுடன், 2026 ஜனவரியில் மாத்திரமே இந்நிபந்தனைக்கு இணங்க இலங்கை செயற்பட்டுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.


சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், "இவ்வேலைத்திட்டத்தின் சில அடிப்படை இலக்குகளிலிருந்து இலங்கை விலகியுள்ளது. இதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3 சதவீதம் வரை மந்தமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது." - என்றார்.


பொது நிதி மற்றும் முதலீட்டு மேலாண்மைத் துறை மற்றும் மின்சாரத் துறை மறுசீரமைப்புகளை முழுமையாக நிறைவு செய்ய இலங்கை அரசு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்  வலியுறுத்தியுள்ள அவர், கடன் மறுசீரமைப்பு நிலைத்தன்மையில் அதிக ஆபத்து காணப்படுவதாகவும், பணவியல் கொள்கையூடாக விலை ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.


இதனிடையே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் இணைந்து சர்வதேச நாணய நிதியத்துக்கு விசேட விளக்கக் கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.


மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, எரிசக்தி விலைகளை மறுசீரமைக்கும் அதேவேளையில், அதன் பொருளாதாரத் தாக்கத்தைக் குறைத்து வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்காகத் தற்காலிக மற்றும் இலக்கு வைக்கப்பட்ட நிவாரணப் பொதி அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கடிதத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


அந்த உதவிப் பொதியில் எரிபொருள் மற்றும் மின்சார மானியங்கள், சிறு விவசாயிகளுக்கான உர மானியங்கள், மீனவர்களுக்கான உதவிகள் மற்றும் அஸ்வெசும நிதிப் பரிமாற்ற வேலைத்திட்டத்துக்கான கூடுதல் நிதிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. மேலும், சமீபத்தில் திறைசேரியில் இடம்பெற்ற 2.5 மில்லியன் ரூபா நிதி மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்ற சம்பவத்தின் காரணமாகவே, வெளிநாட்டுக் கொடுப்பனவு நிலுவைகள் தொடர்பான அளவுகோலைச் செயற்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இணையவழி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் இவான் பப்பகியோர்கியோ, "இலங்கை புதிய இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பதிலிருந்தும், அதிக வரிகளை விதிப்பதிலிருந்தும் விலகியிருக்க வேண்டும். குறிப்பாக வாகன இறக்குமதியில் இது அவசியமானதாகும்." - என்றார்.


வாகனங்கள் உள்ளிட்ட பொருள்களின் இறக்குமதி மீது வரிகளை அதிகரிப்பது நீண்ட கால அடிப்படையில் வெற்றிகரமான அணுகுமுறையாக அமையாது என்றும் அவர் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


எனினும், இலங்கை அரசு தனது 2025 ஆம் ஆண்டுக்கான வருவாய் இலக்குகளை வெற்றிகரமாக எட்டியுள்ளது என்று பாராட்டியுள்ள அவர், வாகன இறக்குமதி மூலம் கிடைத்த எதிர்பாராத வரி வருவாயானது, அரசின்  ஒட்டுமொத்த வருவாய் ஈட்டலை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், "சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் சீர்திருத்தச் செயல்முறைகள் சரியான பாதையில் வலுவாக முன்னோக்கி நகர்கின்றன. 'டித்வா' சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு போரினால் ஏற்பட்ட சவால்களுக்கு வெற்றிகரமாகப் பதிலளிப்பதற்கான நிதியியல் வெளியை இந்தப்  பொருளாதார சீர்திருத்தங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன." - என்றும் அரசின் முயற்சிகளை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.


எனினும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகத் தற்பொழுது எண்ணெய் விலை உயர்வடைந்து, அதன் விளைவாக இலங்கையின் பணவீக்கம் அதிகரிக்கக் கூடும் என்றும், சுற்றுலா வருவாய் வீழ்ச்சியடைவதால் நடப்புக் கணக்கு பலவீனமடையக் கூடும் என்றும், இதனால் நாட்டின் பொருளாதாரப் பார்வைக்குக் கடுமையான கீழ்நோக்கிய அபாயங்கள் எழுந்துள்ளன என்றும் எச்சரித்துள்ள அவர், இவ்வருடத்தில் பணவீக்கம் 5 வீத மட்டத்தில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் 5, 6 ஆவது மீளாய்வுகளுக்கு அங்கீகாரம் இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் 5 ஆவது மற்றும் 6 ஆவது மீளாய்வுகளுக்குச் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை நேற்று வியாழக்கிழமை தனது உத்தியோகபூர்வ அனுமதியை வழங்கியுள்ளது.இதற்கமைய, இலங்கைக்கு சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதித்தொகை கிடைக்கப்பெறவுள்ளதுடன், இந்நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள ஒட்டுமொத்தக் கடன் தொகை 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.இதேவேளை, இந்நீடிக்கப்பட்ட நிதி வசதியுடன் தொடர்புடைய சில முக்கிய அளவுகோல்களை இலங்கை பூர்த்தி செய்யத் தவறியுள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டுக் கொடுப்பனவு நிலுவைகள், இறக்குமதி வரம்புகளைக் கடுமையாக்குதல் அல்லது புதிய இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிக்காதிருத்தல் போன்ற தொடர்ச்சியான நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் இலங்கை பின்னடைவைச் சந்தித்துள்ளது.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, எரிபொருள், மின்சாரம், உர மானியம் மற்றும் 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் அமைச்சரவை தீர்மானமொன்றை வெளியிடுவதற்கும், அவை ஒட்டுமொத்தமாக 100 பில்லியன் ரூபா எல்லைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் முன் நிபந்தனையாகக் கோரப்பட்டிருந்தது. எனினும், செப்டெம்பர் மாத இறுதிக்குள் இந்த அளவுகோல்களைச் நடைமுறைப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.மேலும், சில்லறை எரிபொருள் விலைகளை அவற்றின் செலவு - மீட்பு மட்டங்களுக்குக் கொண்டு செல்வது மற்றும் மாதாந்த விலைச்சூத்திரத்துக்கு அமைவாகக் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைச் செய்வதிலும் முரண்பாடுகள் காணப்பட்டுள்ளன. இந்த நிபந்தனையானது 2025 டிசம்பர் மற்றும் 2026 ஏப்ரல் ஆகிய மாதங்களில் மீறப்பட்டுள்ளதுடன், 2026 ஜனவரியில் மாத்திரமே இந்நிபந்தனைக்கு இணங்க இலங்கை செயற்பட்டுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், "இவ்வேலைத்திட்டத்தின் சில அடிப்படை இலக்குகளிலிருந்து இலங்கை விலகியுள்ளது. இதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3 சதவீதம் வரை மந்தமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது." - என்றார்.பொது நிதி மற்றும் முதலீட்டு மேலாண்மைத் துறை மற்றும் மின்சாரத் துறை மறுசீரமைப்புகளை முழுமையாக நிறைவு செய்ய இலங்கை அரசு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்  வலியுறுத்தியுள்ள அவர், கடன் மறுசீரமைப்பு நிலைத்தன்மையில் அதிக ஆபத்து காணப்படுவதாகவும், பணவியல் கொள்கையூடாக விலை ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.இதனிடையே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் இணைந்து சர்வதேச நாணய நிதியத்துக்கு விசேட விளக்கக் கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, எரிசக்தி விலைகளை மறுசீரமைக்கும் அதேவேளையில், அதன் பொருளாதாரத் தாக்கத்தைக் குறைத்து வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்காகத் தற்காலிக மற்றும் இலக்கு வைக்கப்பட்ட நிவாரணப் பொதி அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கடிதத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.அந்த உதவிப் பொதியில் எரிபொருள் மற்றும் மின்சார மானியங்கள், சிறு விவசாயிகளுக்கான உர மானியங்கள், மீனவர்களுக்கான உதவிகள் மற்றும் அஸ்வெசும நிதிப் பரிமாற்ற வேலைத்திட்டத்துக்கான கூடுதல் நிதிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. மேலும், சமீபத்தில் திறைசேரியில் இடம்பெற்ற 2.5 மில்லியன் ரூபா நிதி மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்ற சம்பவத்தின் காரணமாகவே, வெளிநாட்டுக் கொடுப்பனவு நிலுவைகள் தொடர்பான அளவுகோலைச் செயற்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இணையவழி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் இவான் பப்பகியோர்கியோ, "இலங்கை புதிய இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பதிலிருந்தும், அதிக வரிகளை விதிப்பதிலிருந்தும் விலகியிருக்க வேண்டும். குறிப்பாக வாகன இறக்குமதியில் இது அவசியமானதாகும்." - என்றார்.வாகனங்கள் உள்ளிட்ட பொருள்களின் இறக்குமதி மீது வரிகளை அதிகரிப்பது நீண்ட கால அடிப்படையில் வெற்றிகரமான அணுகுமுறையாக அமையாது என்றும் அவர் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.எனினும், இலங்கை அரசு தனது 2025 ஆம் ஆண்டுக்கான வருவாய் இலக்குகளை வெற்றிகரமாக எட்டியுள்ளது என்று பாராட்டியுள்ள அவர், வாகன இறக்குமதி மூலம் கிடைத்த எதிர்பாராத வரி வருவாயானது, அரசின்  ஒட்டுமொத்த வருவாய் ஈட்டலை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், "சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் சீர்திருத்தச் செயல்முறைகள் சரியான பாதையில் வலுவாக முன்னோக்கி நகர்கின்றன. 'டித்வா' சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு போரினால் ஏற்பட்ட சவால்களுக்கு வெற்றிகரமாகப் பதிலளிப்பதற்கான நிதியியல் வெளியை இந்தப்  பொருளாதார சீர்திருத்தங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன." - என்றும் அரசின் முயற்சிகளை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.எனினும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகத் தற்பொழுது எண்ணெய் விலை உயர்வடைந்து, அதன் விளைவாக இலங்கையின் பணவீக்கம் அதிகரிக்கக் கூடும் என்றும், சுற்றுலா வருவாய் வீழ்ச்சியடைவதால் நடப்புக் கணக்கு பலவீனமடையக் கூடும் என்றும், இதனால் நாட்டின் பொருளாதாரப் பார்வைக்குக் கடுமையான கீழ்நோக்கிய அபாயங்கள் எழுந்துள்ளன என்றும் எச்சரித்துள்ள அவர், இவ்வருடத்தில் பணவீக்கம் 5 வீத மட்டத்தில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement