நெடுந்தீவுப் பிரதேச மக்களின் வலிகள் எனக்கு நன்றாகத் தெரியும். உங்களின் ஆதங்கங்களை நான் ஒருபோதும் மறுக்கவில்லை. தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில், உங்கள் பிரதேசத்தின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான முழுமையான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. ஒரே நாளில் அனைத்தையும் செய்து முடிப்பதற்கு எங்களுக்கும் விருப்பம் இருந்தாலும், நடைமுறையில் அதனைப் படிப்படியாகவே முன்னெடுக்க முடியும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் 38 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், நெடுந்தீவு இறங்குதுறையில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுலா தகவல் நிலையம் மற்றும் பயணிகள் இளைப்பாறும் மண்டபம் (குளியலறை, மலசலகூட வசதிகளுடன்) திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (16) வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் ச.சத்தியவரதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு கட்டடத் தொகுதியை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் மக்கள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:
'நான் 1991ஆம் ஆண்டு எனது முதல் நியமனமாக இந்தப் பிரதேசத்துக்கே உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டேன். அப்போதிலிருந்தே இந்த மக்கள் கடல் போக்குவரத்துச் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதை நான் அறிவேன். அன்றைய காலகட்டத்தில், 'குமுதினி' படகுதான் இந்தக் கடற்போக்குவரத்துக்குப் பொருத்தமானது என மக்கள் கூறினார்கள். அதேபோல, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைக்க வேண்டும் எனவும் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தார்கள். நான் யாழ். மாவட்டச் செயலாளராகப் பதவியேற்ற பின்னரும் இந்த இறங்குதுறையைப் புனரமைக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டேன்; ஆயினும் அது முழுமையாகச் சாத்தியப்படவில்லை.
தற்போதைய அரசாங்கம் அந்த வேலைத்திட்டங்களுக்கான காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. நான் மாவட்டச் செயலாளராக இருந்தபோது மக்களுக்குச் செய்ய நினைத்த பல விடயங்கள், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில்தான் நடைமுறைச் சாத்தியமாகின்றன. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. இதற்காகக் கௌரவ அமைச்சர்கள் பிமல் ரத்நாயக்க மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு எனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவர்கள் மட்டுமன்றி, இந்த அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களும் நெடுந்தீவு உள்ளிட்ட எமது அனைத்துத் தீவுகளின் அபிவிருத்தியிலும் அதீத கரிசனை கொண்டுள்ளனர்.
நெடுந்தீவுக்கான படகுகளைக் கட்டுவதில் குறிகாட்டுவான் இறங்குதுறையில் உள்ள சிரமங்கள் குறித்து கடந்த ஆண்டு நான் இங்கு வந்தபோது மக்கள் சுட்டிக்காட்டினார்கள். தற்போது குறிகாட்டுவான் இறங்குதுறையும் புனரமைக்கப்படவுள்ளது. எனவே, அந்தப் பிரச்சினையும் விரைவில் தீர்க்கப்படும். நெடுந்தீவு இறங்குதுறையை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். எந்தத் திணைக்களத்தின் ஊடாக என்றாலும், மக்களுக்கான அபிவிருத்திப் பணிகள் தடையின்றி நடைபெற வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், கடல்நீரை நன்னீராக்கும் மேலுமொரு புதிய இயந்திரம் இங்கு விரைவில் நிறுவப்படவுள்ளது. அதேபோல, எரிபொருள் நிரப்பு நிலையமொன்றும் விரைவில் அமையவுள்ளது.
கடந்த முறை நான் இங்கு வந்தபோது, பிரதான வீதியின் நிலைமையை நேரில் பார்வையிட்டு, மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் ஒரு பகுதி வேலைகளைச் செய்து முடித்திருந்தோம். எஞ்சிய வேலைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளது. அந்தப் பணிகளும் விரைவில் ஆரம்பமாகும். மாகாண சபையின் நிதியினூடாக உள்ளக வீதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த ஆண்டு 65 மில்லியன் ரூபா செலவில் தீர்த்தக்கரை வீதி புனரமைக்கப்படவுள்ளது. அத்துடன், மக்களின் படகுச் சேவைகளைத் திருத்தியமைப்பதற்கும் மாகாண சபையால் நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கடல் போக்குவரத்தில் மக்கள் எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடிகளை உடனடியாகச் சீர்செய்வதற்கான தற்காலிக ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திடம் நாம் முன்வைக்கும் அனைத்து நிதிக் கோரிக்கைகளுக்கும் உடனுக்குடன் நிதி கிடைக்கப்பெறுகின்றது. அரசாங்கத்திடம் அதற்கான பணம் இருக்கின்றது. ஆனால், திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அரச திணைக்களங்களில்தான் பெரிய தாமதங்கள் காணப்படுகின்றன. நடைமுறைச் சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்களைக் கூறி அவர்கள் திட்டங்களைத் தாமதப்படுத்துகின்றனர். இதனால் பொதுமக்களே பெரிதும் அவதியுறுகின்றனர். அரசாங்கம் மாறியிருந்தாலும், சில அதிகாரிகள் இன்னமும் மாறவில்லை என்பது கவலைக்குரியது.
இந்த நெடுந்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இன்னும் அதிகமாக அரச உயர் பதவிகளுக்கு வர வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரதேசம் இன்னமும் வேகமாக வளர்ச்சியடையும். எதிர்காலத்தில் நெடுந்தீவு பிரதேசம் சுற்றுலாவிகளால் நிரம்பி வழியும் ஒரு முக்கிய மையமாக நிச்சயம் மாறும், என்று தெரிவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், 'நான் இங்கு வந்து தங்கி நின்று மக்களுடன் கலந்துரையாடியபோது அவர்கள் பல பிரச்சினைகளை முன்வைத்தார்கள். அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. முதலீடு செய்த குறுகிய காலத்தினுள் இலாபத்தை ஈட்டித் தரக்கூடிய ஒரு துறையாகச் சுற்றுலாத்துறை விளங்குகின்றது. நெடுந்தீவுக்கு வரும் சுற்றுலாவிகளை இங்கு ஓரிரு நாட்கள் தங்கியிருக்கச் செய்யும் வகையில் சுற்றுலாத்துறையை நாம் திட்டமிட்டு வளர்த்தெடுக்க வேண்டும். நெடுந்தீவில் மிகப் பெரிய திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தவுள்ளோம். இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் நாங்கள் நிச்சயம் பூர்த்தி செய்வோம், என்றார்.
நெடுந்தீவு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ச.சத்தியவரதன் தனது தலைமையுரையில், 'எமது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்தால், இந்த மக்கள் சுற்றுலாத்துறையைத் தாமாகவே முன்வந்து மிகுந்த ஈடுபாட்டுடன் வளர்த்தெடுப்பார்கள்' எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், நெடுந்தீவு பிரதேச செயலாளர், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், சுற்றுலாப் பணியகத்தின் பணிப்பாளர், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
நெடுந்தீவுப் பிரதேச மக்களின் வலிகள் எனக்கு நன்றாகத் தெரியும் - ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு நெடுந்தீவுப் பிரதேச மக்களின் வலிகள் எனக்கு நன்றாகத் தெரியும். உங்களின் ஆதங்கங்களை நான் ஒருபோதும் மறுக்கவில்லை. தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில், உங்கள் பிரதேசத்தின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான முழுமையான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. ஒரே நாளில் அனைத்தையும் செய்து முடிப்பதற்கு எங்களுக்கும் விருப்பம் இருந்தாலும், நடைமுறையில் அதனைப் படிப்படியாகவே முன்னெடுக்க முடியும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் 38 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், நெடுந்தீவு இறங்குதுறையில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுலா தகவல் நிலையம் மற்றும் பயணிகள் இளைப்பாறும் மண்டபம் (குளியலறை, மலசலகூட வசதிகளுடன்) திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (16) வியாழக்கிழமை காலை நடைபெற்றது. நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் ச.சத்தியவரதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு கட்டடத் தொகுதியை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர்.இந்நிகழ்வில் மக்கள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:'நான் 1991ஆம் ஆண்டு எனது முதல் நியமனமாக இந்தப் பிரதேசத்துக்கே உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டேன். அப்போதிலிருந்தே இந்த மக்கள் கடல் போக்குவரத்துச் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதை நான் அறிவேன். அன்றைய காலகட்டத்தில், 'குமுதினி' படகுதான் இந்தக் கடற்போக்குவரத்துக்குப் பொருத்தமானது என மக்கள் கூறினார்கள். அதேபோல, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைக்க வேண்டும் எனவும் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தார்கள். நான் யாழ். மாவட்டச் செயலாளராகப் பதவியேற்ற பின்னரும் இந்த இறங்குதுறையைப் புனரமைக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டேன்; ஆயினும் அது முழுமையாகச் சாத்தியப்படவில்லை.தற்போதைய அரசாங்கம் அந்த வேலைத்திட்டங்களுக்கான காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. நான் மாவட்டச் செயலாளராக இருந்தபோது மக்களுக்குச் செய்ய நினைத்த பல விடயங்கள், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில்தான் நடைமுறைச் சாத்தியமாகின்றன. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. இதற்காகக் கௌரவ அமைச்சர்கள் பிமல் ரத்நாயக்க மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு எனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவர்கள் மட்டுமன்றி, இந்த அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களும் நெடுந்தீவு உள்ளிட்ட எமது அனைத்துத் தீவுகளின் அபிவிருத்தியிலும் அதீத கரிசனை கொண்டுள்ளனர்.நெடுந்தீவுக்கான படகுகளைக் கட்டுவதில் குறிகாட்டுவான் இறங்குதுறையில் உள்ள சிரமங்கள் குறித்து கடந்த ஆண்டு நான் இங்கு வந்தபோது மக்கள் சுட்டிக்காட்டினார்கள். தற்போது குறிகாட்டுவான் இறங்குதுறையும் புனரமைக்கப்படவுள்ளது. எனவே, அந்தப் பிரச்சினையும் விரைவில் தீர்க்கப்படும். நெடுந்தீவு இறங்குதுறையை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். எந்தத் திணைக்களத்தின் ஊடாக என்றாலும், மக்களுக்கான அபிவிருத்திப் பணிகள் தடையின்றி நடைபெற வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், கடல்நீரை நன்னீராக்கும் மேலுமொரு புதிய இயந்திரம் இங்கு விரைவில் நிறுவப்படவுள்ளது. அதேபோல, எரிபொருள் நிரப்பு நிலையமொன்றும் விரைவில் அமையவுள்ளது.கடந்த முறை நான் இங்கு வந்தபோது, பிரதான வீதியின் நிலைமையை நேரில் பார்வையிட்டு, மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் ஒரு பகுதி வேலைகளைச் செய்து முடித்திருந்தோம். எஞ்சிய வேலைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளது. அந்தப் பணிகளும் விரைவில் ஆரம்பமாகும். மாகாண சபையின் நிதியினூடாக உள்ளக வீதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த ஆண்டு 65 மில்லியன் ரூபா செலவில் தீர்த்தக்கரை வீதி புனரமைக்கப்படவுள்ளது. அத்துடன், மக்களின் படகுச் சேவைகளைத் திருத்தியமைப்பதற்கும் மாகாண சபையால் நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கடல் போக்குவரத்தில் மக்கள் எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடிகளை உடனடியாகச் சீர்செய்வதற்கான தற்காலிக ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திடம் நாம் முன்வைக்கும் அனைத்து நிதிக் கோரிக்கைகளுக்கும் உடனுக்குடன் நிதி கிடைக்கப்பெறுகின்றது. அரசாங்கத்திடம் அதற்கான பணம் இருக்கின்றது. ஆனால், திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அரச திணைக்களங்களில்தான் பெரிய தாமதங்கள் காணப்படுகின்றன. நடைமுறைச் சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்களைக் கூறி அவர்கள் திட்டங்களைத் தாமதப்படுத்துகின்றனர். இதனால் பொதுமக்களே பெரிதும் அவதியுறுகின்றனர். அரசாங்கம் மாறியிருந்தாலும், சில அதிகாரிகள் இன்னமும் மாறவில்லை என்பது கவலைக்குரியது.இந்த நெடுந்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இன்னும் அதிகமாக அரச உயர் பதவிகளுக்கு வர வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரதேசம் இன்னமும் வேகமாக வளர்ச்சியடையும். எதிர்காலத்தில் நெடுந்தீவு பிரதேசம் சுற்றுலாவிகளால் நிரம்பி வழியும் ஒரு முக்கிய மையமாக நிச்சயம் மாறும், என்று தெரிவித்தார்.நிகழ்வில் உரையாற்றிய கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், 'நான் இங்கு வந்து தங்கி நின்று மக்களுடன் கலந்துரையாடியபோது அவர்கள் பல பிரச்சினைகளை முன்வைத்தார்கள். அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. முதலீடு செய்த குறுகிய காலத்தினுள் இலாபத்தை ஈட்டித் தரக்கூடிய ஒரு துறையாகச் சுற்றுலாத்துறை விளங்குகின்றது. நெடுந்தீவுக்கு வரும் சுற்றுலாவிகளை இங்கு ஓரிரு நாட்கள் தங்கியிருக்கச் செய்யும் வகையில் சுற்றுலாத்துறையை நாம் திட்டமிட்டு வளர்த்தெடுக்க வேண்டும். நெடுந்தீவில் மிகப் பெரிய திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தவுள்ளோம். இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் நாங்கள் நிச்சயம் பூர்த்தி செய்வோம், என்றார்.நெடுந்தீவு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ச.சத்தியவரதன் தனது தலைமையுரையில், 'எமது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்தால், இந்த மக்கள் சுற்றுலாத்துறையைத் தாமாகவே முன்வந்து மிகுந்த ஈடுபாட்டுடன் வளர்த்தெடுப்பார்கள்' எனக் குறிப்பிட்டார்.இந்நிகழ்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், நெடுந்தீவு பிரதேச செயலாளர், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், சுற்றுலாப் பணியகத்தின் பணிப்பாளர், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.