மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு றெட்பானாவில் 2009 ஆம் ஆண்டு யுத்தத்திற்கு பின்னர் முதன்முதலாக மாவீரர் பெற்றோர் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
மாவீரர் பெற்றோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு சிறுவர்களின் பாண்ட் வாத்திய இசையுடன் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்டு பொதுச்சுடரினை மாவீரரின் பெற்றோர் ஜோசப் முனியம்மா ஏற்றி வைத்ததனை தொடர்ந்து மாவீரர்களின் பொது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது கலை நிகழ்வுகளும் மாவீரர்களின் வீரம் தியாகம் அர்ப்பணிப்பு தொடர்பிலான நினைவுரைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டு அவர்களுக்கான நினைவுச்சின்னம் வழங்கப்பட்டன.
பாரதிபுரம் வட்டாரத்தில், றெட்பானா மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில், முன்னாள் போராளியும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினருமான கு.அகிலன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முன்னாள் போராளியும் , புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளருமான வே.கரிகாலன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



அடுத்து,
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான மாவீரர் நினைவாலயம் சாவகச்சேரி நகரில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஒழுங்கமைப்பில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாவீரர்களின் தியாகங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கில் சிறுமி ஒருவர் பிரதான ஈகைச்சுடரை ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நினைவுக் கல்லறைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்களால் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.




அடுத்து,
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறை இரத்ததான சங்கத்தின் 83 வது இரத்ததான முகாம் சங்க தலைவர் பா.வீரசுரேந்திரன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் மண்டபத்தில் காலை 8.30 மணிமுதல் மாலை 3.30 வரை இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் 35 ஆண்களும், 05 பெண்களுமாக மொத்தம் 40 பேர் குருதிக் கொடை வழங்கியிருந்தனர்.
குருதியினை யாழ்ப்பாணம் இரத்த வங்கி அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.



அடுத்து,
இலங்கை தமிழரசு கட்சியின் மாவீரர் பெற்றோர் உரித்துடையோரை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வேம்படி பொது மண்டபத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதில் முதல் நிகழ்வாக மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் மங்கல வாத்தியம் முழங்க விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு பொதுச் சுடரினை உடுத்துறையை சேர்ந்த மாவீரரின் தந்தை பொன் சிவலிங்கம் அவர்கள் எற்றிவைத்ததை தொடர்ந்து பொது ஈகைச்சுடரினை கட்டைக்காடு முள்ளியனைச் சேர்ந்த மாவீரர் கயல் மற்றும் கடல் ஆகியோரின் தாயார் ஏற்றிவைத்தார்.
அதனை தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவ படங்களுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மாவீர்களின் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சி பதில் செயலாளர் எம் ஏ சுமந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ், உட்பட பலர் உரை நிகழ்த்தினர்.
இதில் மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர்கள், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர்கள், ஈழமக்கள் ஜனநாயக கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

