• May 27 2026

'கட்டாய வேலை வாங்கல்' நிலைக்கு தள்ளப்படும் மலையகத் தொழிலாளர்கள்! சர்வதேச மன்னிப்புச் சபை அதிர்ச்சி அறிக்கை

Chithra / May 27th 2026, 4:11 pm
image

இலங்கையிலுள்ள தனியார் மற்றும் சிறு தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழ்த் தொழிலாளர்கள், சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் (ILO) வரையறுக்கப்பட்ட ‘கட்டாய வேலை வாங்கல்’ என்ற நிலைக்கு நிகரான கடுமையான தொழிலாளர் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.


இந்த விசேட அறிக்கை வெளியீட்டு விழா இன்றைய தினம் (27/05/2026) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) உத்தியோகபூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்நாள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மலையக அரசியல் பிரதிநிதிகள், ஏராளமான சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


ஜனவரி 2024 முதல் ஜனவரி 2026 வரையான காலப்பகுதியில், இலங்கையின் தென்பகுதியில் உள்ள காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் 45 தேயிலைத் தோட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 159 தொழிலாளர்கள், தோட்ட மேலாளர்கள் மற்றும் கவனக் குழுக்களுடன் நேரடி நேர்காணல்கள் நடத்தப்பட்டு அதிர்ச்சித் தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் இந்தியாவின் தெற்குப் பிரதேசங்களிலிருந்து தேயிலைத் தோட்ட வேலைகளுக்காக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட மக்களின் சந்ததிகளே இந்த மலையகத் தமிழர்கள் ஆவர். 


இவர்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டு வரும் முறையான இனப் பாகுபாடும் புறக்கணிப்பும், அவர்களைக் கட்டாய வேலை வாங்கலுக்கு ஆளாகும் நிலைக்குத் தள்ளியுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், தங்குமிடம் மற்றும் இதர நலன்புரி வசதிகள் அனைத்தும் முழுமையாகத் தோட்டத் துரைமார்களையே சார்ந்துள்ளதால், தங்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை அவர்களால் தட்டிக்கேட்க முடியாத நிலை காணப்படுகிறது. எந்த நேரத்திலும் தாங்கள் வசிக்கும் இடங்களை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்திலேயே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.


பணிக்குத் தாமதமாக வருதல், வழங்கப்படாத சம்பளம் குறித்துக் கேள்வி எழுப்புதல் போன்ற காரணங்களுக்காகத் தோட்ட நிர்வாகத்தினரால் தொழிலாளர்கள் வாய்மொழி மூலமாகவும் உடல் ரீதியாகவும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 


தாங்கள் வேலை செய்யாவிட்டால் அல்லது இலக்குகளை அடையாவிட்டால் நிர்வாகத்தினர் கைகள், கால்கள் அல்லது தடிகளால் தங்களைத் தாக்குவதாகத் தொழிலாளர்கள் சாட்சியமளித்துள்ளனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 45 தோட்டங்களில் 27 தோட்டங்களில், ஒரு தொழிலாளி நாளொன்றுக்கு 25 கிலோ கிராமுக்கும் அதிகமான தேயிலைக் கொழுந்துகளைப் பறிக்க வேண்டும் என்ற மிகக் கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


இந்த இலக்கை எட்டத் தவறும்போது, அவர்களின் மிகச் சிறிய நாளாந்த சம்பளமான 1,000 ரூபாய் (சுமார் 3.10 அமெரிக்க டாலர்கள்) நிர்வாகத்தினால் கழிக்கப்படுகிறது அல்லது தாமதப்படுத்தப்படுகிறது. இந்தத் தந்திரோபாயங்கள் தோட்டத் தொழிலாளர்களின் கடன்களை அதிகரித்து, ‘கடன்பணி அடிமைத்தனம்’ தலைமுறை தலைமுறையாகத் தொடரும் சுழற்சியை உருவாக்குகிறது. 


மேலும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 22 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தங்களின் நடமாட்ட சுதந்திரம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பயணங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் மற்றும் குறிப்பிட்ட நேர நடமாட்டத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. 


தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான வீட்டு வசதிகள் இன்னும் செய்து தரப்படவில்லை என்பதுடன், போதிய இடவசதி மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.


உள்நாட்டுச் சட்டம் தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும், தனியார் தேயிலைத் தோட்டங்கள் சட்டங்களை முறையாக அமல்படுத்துவதில்லை. தொழிலாளர்களை நிரந்தரமாக்காமல் ‘அமையத் தொழிலாளர்கள்’ (Casual Workers) என வகைப்படுத்துவதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பிரசவ காலச் 


சலுகைகள், ஓய்வூதியம், மருத்துவ மற்றும் உடல்நலக் குறைவு விடுமுறைகள் மறுக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சட்ட ரீதியான தீர்வுகளைப் பெறுவதில் பிரதான தடையாக மொழிப் பிரச்சனை காணப்படுகிறது. அரசு அதிகாரிகள் மலையகத் தமிழர்களின் மொழியைப் பேச முடியாததால், அவர்களுக்குரிய சட்டப் பாதுகாப்பை வழங்கத் தவறிவிடுகின்றனர். அத்துடன், தோட்டத் தொழில் தருநர்களின் தடையால் பல தோட்டங்களில் தொழிற்சங்க பிரதிநிதித்துவமும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.


அறிக்கை வெளியீட்டைத் தொடர்ந்து இங்கு ஒரு விசேட குழு விவாதம் (Panel discussion) இடம்பெற்றது. சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவுக்கான துணை பிராந்திய பணிப்பாளர் இசபெல் லாஸ்ஸியின் நெறியாள்கையில் நடைபெற்ற இந்த விவாதத்தில், சமூக ஆர்வலர் கௌதமன் பாலச்சந்திரன், பெண்கள் உரிமைகள் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் ஆய்வாளர் கமலேஸ்வரி லெச்சுமணன் மற்றும் சட்டத்தரணி விஜயகுமார் சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டு தமது ஆழமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.


இது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் ஸ்மிரிதி சிங் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையிலுள்ள தனியார் தேயிலைத் தோட்டங்கள் மலையகத் தமிழ்த் தொழிலாளர்களை நடத்தும் விதம் தொழிலாளர் சட்டங்களை முழுமையாக மீறுவதோடு, எந்தவித பொறுப்புக்கூறலும் இன்றி அமைகிறது என்று குறிப்பிட்டுள்ளார். 


ஏற்கனவே காணப்படும் சட்டரீதியான முன் பாதுகாப்புகளுக்கு மத்தியிலும் இந்த துஷ்பிரயோகங்கள் தொடர்வது, தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பதைப் பிரதிபலிக்கிறது என அவர் மேலும் கூறினார். 


ஆழமாக வேரூன்றிய பாகுபாடும், தீவிரமான விளிம்புநிலைக்குத் தள்ளப்படுதலும் இந்தத் தொழிலாளர்களைச் சுரண்டப்படும் நிலைக்கு ஆளாக்கியுள்ளது. எனவே, இலங்கை அரசாங்கம் உடனடியாக தலையிட்டு, இந்தத் தோட்டங்களில் சோதனைகளை நடத்தி, தொழிலாளர் உரிமைகள் மீறப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அத்துடன், தவறிழைத்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி அர்த்தமுள்ள தீர்வுகளை வழங்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. 


இலங்கை அரசு சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஒப்பந்தங்களில் ஒரு தரப்பாக உள்ளதால், தொழிலாளர்களைப் பாகுபாடின்றிப் பாதுகாக்கும் கடப்பாடு அதற்குண்டு என்பதையும் இந்த அறிக்கை மிக வலுவாக வலியுறுத்தியுள்ளது.



'கட்டாய வேலை வாங்கல்' நிலைக்கு தள்ளப்படும் மலையகத் தொழிலாளர்கள் சர்வதேச மன்னிப்புச் சபை அதிர்ச்சி அறிக்கை இலங்கையிலுள்ள தனியார் மற்றும் சிறு தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழ்த் தொழிலாளர்கள், சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் (ILO) வரையறுக்கப்பட்ட ‘கட்டாய வேலை வாங்கல்’ என்ற நிலைக்கு நிகரான கடுமையான தொழிலாளர் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.இந்த விசேட அறிக்கை வெளியீட்டு விழா இன்றைய தினம் (27/05/2026) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) உத்தியோகபூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்நாள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மலையக அரசியல் பிரதிநிதிகள், ஏராளமான சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.ஜனவரி 2024 முதல் ஜனவரி 2026 வரையான காலப்பகுதியில், இலங்கையின் தென்பகுதியில் உள்ள காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் 45 தேயிலைத் தோட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 159 தொழிலாளர்கள், தோட்ட மேலாளர்கள் மற்றும் கவனக் குழுக்களுடன் நேரடி நேர்காணல்கள் நடத்தப்பட்டு அதிர்ச்சித் தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் இந்தியாவின் தெற்குப் பிரதேசங்களிலிருந்து தேயிலைத் தோட்ட வேலைகளுக்காக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட மக்களின் சந்ததிகளே இந்த மலையகத் தமிழர்கள் ஆவர். இவர்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டு வரும் முறையான இனப் பாகுபாடும் புறக்கணிப்பும், அவர்களைக் கட்டாய வேலை வாங்கலுக்கு ஆளாகும் நிலைக்குத் தள்ளியுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், தங்குமிடம் மற்றும் இதர நலன்புரி வசதிகள் அனைத்தும் முழுமையாகத் தோட்டத் துரைமார்களையே சார்ந்துள்ளதால், தங்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை அவர்களால் தட்டிக்கேட்க முடியாத நிலை காணப்படுகிறது. எந்த நேரத்திலும் தாங்கள் வசிக்கும் இடங்களை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்திலேயே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.பணிக்குத் தாமதமாக வருதல், வழங்கப்படாத சம்பளம் குறித்துக் கேள்வி எழுப்புதல் போன்ற காரணங்களுக்காகத் தோட்ட நிர்வாகத்தினரால் தொழிலாளர்கள் வாய்மொழி மூலமாகவும் உடல் ரீதியாகவும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தாங்கள் வேலை செய்யாவிட்டால் அல்லது இலக்குகளை அடையாவிட்டால் நிர்வாகத்தினர் கைகள், கால்கள் அல்லது தடிகளால் தங்களைத் தாக்குவதாகத் தொழிலாளர்கள் சாட்சியமளித்துள்ளனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 45 தோட்டங்களில் 27 தோட்டங்களில், ஒரு தொழிலாளி நாளொன்றுக்கு 25 கிலோ கிராமுக்கும் அதிகமான தேயிலைக் கொழுந்துகளைப் பறிக்க வேண்டும் என்ற மிகக் கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டத் தவறும்போது, அவர்களின் மிகச் சிறிய நாளாந்த சம்பளமான 1,000 ரூபாய் (சுமார் 3.10 அமெரிக்க டாலர்கள்) நிர்வாகத்தினால் கழிக்கப்படுகிறது அல்லது தாமதப்படுத்தப்படுகிறது. இந்தத் தந்திரோபாயங்கள் தோட்டத் தொழிலாளர்களின் கடன்களை அதிகரித்து, ‘கடன்பணி அடிமைத்தனம்’ தலைமுறை தலைமுறையாகத் தொடரும் சுழற்சியை உருவாக்குகிறது. மேலும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 22 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தங்களின் நடமாட்ட சுதந்திரம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பயணங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் மற்றும் குறிப்பிட்ட நேர நடமாட்டத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான வீட்டு வசதிகள் இன்னும் செய்து தரப்படவில்லை என்பதுடன், போதிய இடவசதி மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டுச் சட்டம் தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும், தனியார் தேயிலைத் தோட்டங்கள் சட்டங்களை முறையாக அமல்படுத்துவதில்லை. தொழிலாளர்களை நிரந்தரமாக்காமல் ‘அமையத் தொழிலாளர்கள்’ (Casual Workers) என வகைப்படுத்துவதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பிரசவ காலச் சலுகைகள், ஓய்வூதியம், மருத்துவ மற்றும் உடல்நலக் குறைவு விடுமுறைகள் மறுக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சட்ட ரீதியான தீர்வுகளைப் பெறுவதில் பிரதான தடையாக மொழிப் பிரச்சனை காணப்படுகிறது. அரசு அதிகாரிகள் மலையகத் தமிழர்களின் மொழியைப் பேச முடியாததால், அவர்களுக்குரிய சட்டப் பாதுகாப்பை வழங்கத் தவறிவிடுகின்றனர். அத்துடன், தோட்டத் தொழில் தருநர்களின் தடையால் பல தோட்டங்களில் தொழிற்சங்க பிரதிநிதித்துவமும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.அறிக்கை வெளியீட்டைத் தொடர்ந்து இங்கு ஒரு விசேட குழு விவாதம் (Panel discussion) இடம்பெற்றது. சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவுக்கான துணை பிராந்திய பணிப்பாளர் இசபெல் லாஸ்ஸியின் நெறியாள்கையில் நடைபெற்ற இந்த விவாதத்தில், சமூக ஆர்வலர் கௌதமன் பாலச்சந்திரன், பெண்கள் உரிமைகள் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் ஆய்வாளர் கமலேஸ்வரி லெச்சுமணன் மற்றும் சட்டத்தரணி விஜயகுமார் சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டு தமது ஆழமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.இது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் ஸ்மிரிதி சிங் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையிலுள்ள தனியார் தேயிலைத் தோட்டங்கள் மலையகத் தமிழ்த் தொழிலாளர்களை நடத்தும் விதம் தொழிலாளர் சட்டங்களை முழுமையாக மீறுவதோடு, எந்தவித பொறுப்புக்கூறலும் இன்றி அமைகிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே காணப்படும் சட்டரீதியான முன் பாதுகாப்புகளுக்கு மத்தியிலும் இந்த துஷ்பிரயோகங்கள் தொடர்வது, தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பதைப் பிரதிபலிக்கிறது என அவர் மேலும் கூறினார். ஆழமாக வேரூன்றிய பாகுபாடும், தீவிரமான விளிம்புநிலைக்குத் தள்ளப்படுதலும் இந்தத் தொழிலாளர்களைச் சுரண்டப்படும் நிலைக்கு ஆளாக்கியுள்ளது. எனவே, இலங்கை அரசாங்கம் உடனடியாக தலையிட்டு, இந்தத் தோட்டங்களில் சோதனைகளை நடத்தி, தொழிலாளர் உரிமைகள் மீறப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அத்துடன், தவறிழைத்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி அர்த்தமுள்ள தீர்வுகளை வழங்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. இலங்கை அரசு சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஒப்பந்தங்களில் ஒரு தரப்பாக உள்ளதால், தொழிலாளர்களைப் பாகுபாடின்றிப் பாதுகாக்கும் கடப்பாடு அதற்குண்டு என்பதையும் இந்த அறிக்கை மிக வலுவாக வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement